இந்திய கல்வி ஆய்வாளர்களுக்கு 12 மாதங்களுக்கு இலவச ChatGPT Plus: ஓபன்ஏஐ அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் மற்றும் போஸ்ட்டாக்டோரல் ஆய்வாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
OpenAI
Published on: 
Summary

உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவைச் சேர்ந்த தகுதியான கல்வி ஆய்வாளர்களுக்கு 12 மாதங்களுக்கு இலவசமாக 'ChatGPT Plus' சேவையை வழங்கவுள்ளதாக ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் தனது 'ChatGPT for Academic Researchers' திட்டத்தை இந்தியாவிலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள தகுதியான ஆராய்ச்சி பேராசிரியர்கள் மற்றும் போஸ்ட்டாக்டோரல் ஆய்வாளர்கள் பயனடைய முடியும்.

இந்த உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முதல்-வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மானியத்தின் கீழும், சம்பந்தப்பட்ட முதன்மை ஆய்வாளர் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் இரண்டு ஆய்வாளர்கள் வரை என மொத்தம் மூன்று பேருக்கு 12 மாத காலத்திற்கு இலவச 'ChatGPT Plus' வேலைக்கான பணியிடம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அறிவியல், கணிதம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக மேம்பட்ட ஏஐ மாடல்களை ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

யாருக்கெல்லாம் இந்த சலுகை பொருந்தும்?

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் மற்றும் போஸ்ட்டாக்டோரல் ஆய்வாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் தங்களது துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருப்பதுடன், சாட்ஜிபிடியை முறையான கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்க வேண்டும். உயிரியல் அறிவியல், வேதியியல், கணினி அறிவியல், பொறியியல், கணிதம் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

தரவு பாதுகாப்பு பயன்பாடு

ஆய்வாளர்கள் இத்தளத்தில் பகிரும் தரவுகள் ஓபன்ஏஐ நிறுவனத்தின் எதிர்கால ஏஐ மாடல்களைப் பயிற்றுவிப்பதற்கு இயல்பாகப் பயன்படுத்தப்படாது என்று ஓபன்ஏஐ உறுதியளித்துள்ளது. இது கல்வித்துறை சார்ந்த ரகசியத்தன்மையையும் தரவுப் பாதுகாப்பையும் முழுமையாக உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த நவீன தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும் என்று ஓபன்ஏஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X