காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி - மம்தாவை சந்தித்த கனிமொழி எம்.பி

மம்தா மற்றும் கனிமொழியின் சந்திப்பு புதிய கூட்டணிக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.
Mamata-Kanimozhi meeting
Published on
Summary

திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. இதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இது இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியது.

இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகிவிட்டதாகவும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், தேசிய அளவில் மூன்றாவது அரசியல் முன்னணியை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இந்த விவாதங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய அளவில், தற்போது இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA), காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் உள்ளன.

2029 மக்களவை தேர்தல்

இந்தச் சூழ்நிலையில், 2029 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிராந்திய கட்சிகளின் தலைமையில் ஒரு புதிய தேசிய அளவிலான கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறு குறித்து அரசியல் வட்டாரங்கள் விவாதித்து வருவதாக கூறப்படுறது.

அத்தகைய ஒரு கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ள தலைவர்களாக மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பேச்சுவார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த வாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் தமிழகத்தில் காங்கிரஸின் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா கூட்டமைப்பின் எதிர்காலம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை, கனிமொழி எம்.பி சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வரும் நாட்களில் மேலும் கலந்துரையாடல்களும் சந்திப்புகளும் நடைபெறக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com