நேபாள வெள்ளம்: உ.பி., பீகார் முதலமைச்சர்களுடன் அமித் ஷா தீவிர ஆலோசனை

நேபாளத்தின் ஃபுர்கே கோலா பகுதியில் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
Nepal mud debris and Amit Shah
Published on

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கினால் இரு மாநிலங்களின் கீழ்மட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

மத்திய நீர் ஆணையத்தின் (CWC) அறிவுறுத்தலின்படி, நேபாளம்-சீனா எல்லைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் காரணமாக, இந்திய எல்லையில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேபாளத்தின் ஃபுர்கே கோலா பகுதியில் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

பதற்றமான சூழல் ஏற்படவில்லை:

நேபாள பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. பதற்றமான சூழல் எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"வெள்ளத்தின் தாக்கம் இந்தியாவில் உள்ள கண்டக் ஆற்றின் கீழ்மட்டப் பகுதிகளுக்குப் பரவக்கூடும்" என்று அது கூறியது.

உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களும் விழிப்புடன் இருக்குமாறும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. ஏற்படக்கூடிய வெள்ள சூழலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னேற்பாடுகள் தீவிரம்:

"இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் இந்திய சமூகத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல் மற்றும் பிற உதவிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன" என்று அமைச்சகம் கூறியது.

இந்த பேரிடரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அமித் ஷா, இக்கட்டான சூழலில் இந்திய அரசு நேபாளத்துடன் துணை நிற்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

"நேபாளத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகுந்த மனவேதனையை அளிக்கின்றன" என்று அவர் கூறினார்.

"நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடர் குறித்து பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர்களுடன் நான் பேசினேன். இதன் தாக்கம் உணரப்படக்கூடிய எல்லைப் பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து NDRF-ம் தீவிர விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com