

இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் மும்பை மற்றும் பெங்களூருக்கு இடையே உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான கல்யாண், புனே, சோலாப்பூர், கலபுர்கி, ராய்ச்சூர், குண்டக்கல் மற்றும் அனந்தபூர் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரெயில் பயணப் போக்குவரத்தில் புதிய மைல்கல்லாக, நாட்டின் பொருளாதார மையங்களான மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வழக்கமான எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்கும் நீண்ட நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் வகையில், வெறும் 16 மணி நேரத்திற்குள் இந்த வழித்தடத்தைக் கடக்கும் விதமாக இந்த அதிவேகப் படுக்கை வசதி கொண்ட ரெயில் இயக்கப்படவுள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் பெங்களூர் இடையே இயக்கப்படவுள்ள இந்த புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில், இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை சுமார் 8 மணி நேரம் வரை மிச்சப்படுத்துகிறது. தற்போதுள்ள வழக்கமான ரெயில்கள் இந்த தூரத்தைக் கடக்க 24 மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக்கொள்ளும் நிலையில், புதிய வந்தே பாரத் ரெயில் மூலம் பயணிகள் மிகக் குறைந்த நேரத்தில் சிரமமின்றி தங்களது பயணத்தை முடிக்க முடியும்.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகளுடன் இந்த ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏசி மூன்றடுக்கு (3AC), ஏசி இரண்டடுக்கு (2AC) மற்றும் முதல் வகுப்பு ஏசி பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் மொத்தம் 823 பயணிகள் பயணம் செய்யும் வகையில் பிரத்யேகமான மற்றும் வசதியான படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நீண்ட தூரம் இரவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த மற்றும் சொகுசான அனுபவமாக இருக்கும்.
இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் மும்பை மற்றும் பெங்களூருக்கு இடையே உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான கல்யாண், புனே, சோலாப்பூர், கலபுர்கி, ராய்ச்சூர், குண்டக்கல் மற்றும் அனந்தபூர் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் போக்குவரத்து மிகவும் எளிதாக மாறுவதுடன், இரு மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தக உறவும் மேலும் வலுப்பெறும்.
இந்திய ரெயில்வே துறையின் தொடர் முயற்சிகளின் வெளிப்பாடாக இயக்கப்படும் இந்த அதிநவீன ரெயில்கள், நவீன சஸ்பென்ஷன் தொழில்நுட்பம், தானியங்கி கதவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. விமானத்திற்கு நிகரான சொகுசுப் பயணத்தை ரெயில்களிலேயே வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டம், பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.