

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் தேசிய மாநாட்டில் உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை குறித்து செய்த விமர்சனம் சர்ச்சையாகி உள்ளது.
பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்நாட்டு தலைவர்களை அடிக்கடி கட்டிப்பிடிப்பதை விமர்சித்த ராகுல் காந்தி, "பிரதமர் மோடிக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மனிதர்களின் மண்டைக்குள் விசித்திரமான எண்ணங்கள் வருகின்றன. இதையே அவர் 'வெளியுறவுக் கொள்கை' என்று நினைக்கிறார்" என்கிறார்.
மேலும் ஒரு படி மேலே சென்று மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்தார்.
உடனே சந்தீப் தீட்சித் நகைக்சுவையாக, "என்னை மெலோனி (இத்தாலி பிரதமர்) என்று நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே?" என்று கேட்க, ராகுல் காந்தி சிரித்தபடியே "நான் இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை" என்று பதிலளித்தார்.
அதே கூட்டத்தில் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை கோமாளிகள் கூட்டம் என்றும் அவர்கள் அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய முதலாளிகளின் கர சேவகர்களாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.
ராகுல் காந்தி தனது உரையின் முடிவில், "பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் அவர்களைத் தூங்க விடமாட்டோம்.
வெறுப்போ வன்முறையோ இன்றி, அன்பினாலும் அகிம்சையினாலும் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்" என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கள் மிகவும் அருவருப்பான, தரமற்ற ஒன்று என்றும் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு இது அழகல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா சாடியுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது பேசுகையில், "ராகுல் காந்தி மெலோனியின் பெயரைப் பயன்படுத்தவே இல்லை. அவர் தனது கட்சியின் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டியணைத்தார், இதில் எந்தத் தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "நான் ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொண்டவள். பொதுவாக வெளிநாட்டவர்கள் கை குலுக்குவதையே விரும்புவர். எடுத்தவுடனே கட்டிப்பிடிப்பதை விரும்புவதில்லை" என்று பிரதமர் மோடியின் செய்கையை விமர்சித்தார்.