தங்கக் கொள்முதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்துவது ஏன்? சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமடையும் போது, இறக்குமதிக்கான தேவையும் கூடவே அதிகரிக்கும்.
Sridhar Vembu
Published on
Summary

இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையிலும், தங்கம் வாங்குவது, வெளிநாட்டுச் சுற்றுலா செல்வது மற்றும் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவது ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமரின் இந்த வேண்டுகோளுக்குப் பின்னணியில் உள்ள பொருளாதாரக் காரணங்கள் குறித்து 'சோஹோ' நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமடையும் போது, இறக்குமதிக்கான தேவையும் கூடவே அதிகரிக்கும். இந்தியா தற்போதும் கணிசமான அளவு எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுக்காக பிற நாடுகளை சார்ந்துள்ளதால், அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் சீனா ஆகிய கிழக்காசிய நாடுகள் தங்களது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தில் இருந்தபோது, இதேபோன்று அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் மிகக் கடுமையாகச் செயல்பட்டதாக ஸ்ரீதர் வேம்பு நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்து வந்தாலும், அந்த ஏற்றுமதிப் பொருட்களின் தயாரிப்பிற்குத் தேவையான அதிநவீன இயந்திரங்கள், சிபியு , ஜிபியு மற்றும் மென்பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே தங்கம் வாங்குதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

சுயசார்பு இலக்கு

இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையை வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பீட்டுப் பேசியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. ஒரு நிறுவனம் தனது தொழில் விரிவாக்கத்திற்கு முதலைச் சேமித்து முதலீடு செய்வதைப் போல, இந்தியாவும் தன் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்கும் வரை இந்த அந்நியச் செலாவணி பாதுகாப்பு முறை அவசியமானது என்றும், அதற்குச் சில தசாப்தங்கள் ஆகலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com