

திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாக நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க, அவசர அழைப்பின் பேரில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நாளை டெல்லியில் நடைபெறும் 'இந்தியா' கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அவசரத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
காளிகாட் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, பிற்பகல் சுமார் 3 மணியளவில் தமக்கு அவசரத் தகவல் கிடைத்ததாகவும், அது திட்டமிடப்பட்ட பயணம் அல்ல என்றும் தெரிவித்தார். கூட்டத்தின் விவரங்கள் முழுமையாகத் தெரிந்த பிறகே அது குறித்து விரிவாக கருத்து தெரிவிக்க முடியும் என்றும், அழைத்த தலைவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில், அரசியல் சூழலை ஆராயவும் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைந்த வியூகம் வகுக்கவும் நாளை எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட உள்ளனர்.
பெண்கள் இடஒதுக்கீடும் தொகுதி மறுவரையறையும் இணைக்கப்பட்டுள்ள விவகாரம் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மற்றும் இடஒதுக்கீடு அமலாக்கக் காலம் குறித்துக் கட்சிகள் பரிசீலித்து வருகின்றன. மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ள கட்சிகளிடையே பொதுவான கருத்தை உருவாக்குவது எதிர்க்கட்சிகளுக்குச் சவாலாக உள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் பங்கேற்பு ஒருங்கிணைந்த முடிவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பாஜக மற்றும் மாநில நிர்வாகம் தங்கள் கட்சிக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். ஜெய்நகர் மக்களவை உறுப்பினர் பிரதிமா மொண்டலை மூத்த மாநில அரசு அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டு, டெல்லிக்கு செல்ல வேண்டாம் என்றும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாக அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
மேலும், கட்டப்பட்டு வரும் திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தைச் சுற்றி காவல்துறையினர் தடுப்புகள் அமைத்ததையும் அவர் விமர்சித்தார். தமது இல்லத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கட்சித் தொண்டர்கள் அந்தக் கட்டடத்தில் செயல்பட ஏற்பாடு செய்ததாகவும், காவல்துறையினர் அதற்குத் தடை விதிப்பதாகவும் அவர் கூறினார். டெல்லியிலிருந்து திரும்பிய பிறகு இந்த விவகாரம் குறித்துப் பரிசீலிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.