

1980 முதல் 1983 வரையிலான வாக்காளர் பட்டியல்களில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றிருந்ததாகவும், ஏப்ரல் 30, 1983-ல்தான் அவர் இந்தியக் குடியுரிமை பெற்றதாகவும் டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் இரண்டு அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளது.
இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், 1980, 1981, 1982 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளின் வாக்காளர் பட்டியல்களில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறைத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சோனியா காந்தி ஏப்ரல் 30, 1983 அன்றுதான் இந்தியக் குடியுரிமை பெற்றார் என்றும், அதற்கு முன்பு வரை அவர் இத்தாலி நாட்டின் குடிமகளாக இருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் சரிபார்த்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய டெல்லி நீதிமன்ற பார் அசோசியேஷனின் துணைத் தலைவரான வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி என்பவர் இப்புகாரைத் தாக்கல் செய்திருந்தார். இந்தியக் குடியுரிமை இல்லாத நிலையில் 1980-ஆம் ஆண்டிலேயே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் எவ்வாறு இடம்பெற்றது என்று கேள்வி எழுப்பியிருந்த அவர், இது தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரியிருந்தார். முன்னதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இப்புகாரை நிராகரித்த உத்தரவை செப்டம்பர் 21 அன்று சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே ரத்து செய்து, வழக்கை மீண்டும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். காவல்துறையின் நிலை அறிக்கையைப் பெற்ற பிறகே உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார்.
டெல்லி காவல்துறை தனது விசாரணையை நிறைவு செய்ய மேலும் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், துக்ளக் ரோடு காவல் நிலைய ஆய்வாளரையும் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.