

டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
எஸ்ஐஆர் மற்றும் தேர்தல்களில் முறைகேடு செய்ததற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா கூட்டணியினர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினர்.
அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்தில் இருந்து, தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடத்தை நோக்கி பேரணி சென்றனர்.
அப்போது, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையகத்திற்கு முன்னதாக தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது தடுப்பை தாண்டி பேரிகார்டு மீது ஏறி செல்ல முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் இருந்த ஆகாஷ்வானி பவன் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் ராகுல் காந்தி அந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார்.
இறுதியாக சுமார் 8 மணி நேரத்திற்குப்பின் போலீசார் கைது செய்து அவர் காவல் வாகனத்தில் ஏற்றினர். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர், இந்தியா கூட்டணியினர் கைது செய்யப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி செல்ல தடுக்கப்பட்டதை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்கள், அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு கிங்ஸ்வே கேம்ப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காவல்துறையின் நடவடிக்கையால் நீண்ட நேர ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
கைதுக்கு முன்னதாக பேசிய ராகுல், "வாக்குத் திருட்டுக்கு எதிராக நாங்கள் இங்கு போராட்டம் நடத்துகிறோம்.
நாங்கள் இங்கு அமர்ந்திருப்பதில் அரசுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், நாங்கள் எங்கு அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லுங்கள். நாங்கள் அங்கே அமர்வோம்" என்றிருந்தார்.
இந்நிலையில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்தியா கூட்டணியை சேர்ந்த பிற கட்சித் தலைவர்கள் இரவு 10 மணிக்கு பின் விடுவிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.