

SIR தொடங்கும்போது ராகுல் காந்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் ஞானேஷ்குமார் எடுத்த முடிவு மீது மற்ற இரண்டு ஆணையருக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக தகவல் வெளியானது.
இதனால் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் ஞானேஷ்குமாரை நீக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
இன்று ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணியினர் தேர்தல் ஆணையம் பில்டிங் நோக்கி பேரணி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
தேர்தல் ஆணைய அலுவலகம் வெறும் 50 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. ஆனால் எங்களை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதில் என்ன பிரச்சனை என்று எனக்குப் புரியவில்லை. தேர்தலை சரியாக நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் பணி. குறைந்தது 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞானேஷ்குமாரைச் சந்திக்க விரும்புகின்றனர். ஆனால் அவர் பயப்படுகிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. மக்களின் பிரதிநிதிகளால் தேர்தல் ஆணையத்தை சந்திக்க முடியாவிட்டால், பிறகு ஜனநாயகத்திற்கு என்ன அர்த்தம்?
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற காம்பவுண்டில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் உள்ள நிர்வசன் சதான் இடத்தை நோக்கி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை.