

ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் கட்சியின் கடந்தகால ஆட்சிக் காலத்தைச் சுட்டிக்காட்டி 4 கேள்விகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனாவின் ஷென்சென் நகரில் நவம்பர் 19 அன்று நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்தச் சந்திப்பில் உலகளாவிய அமைதி, அணு ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெறாததைக் குறிப்பிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சனம் முன்வைத்தார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியப் பிரதமர் அந்த மேசையில் அமர்ந்திருப்பார் என்றும், “சமரசம் செய்துகொண்ட பிரதமரால்” அங்கு அமர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் கட்சியின் கடந்தகால ஆட்சிக் காலத்தைச் சுட்டிக்காட்டி 4 கேள்விகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரண் ரிஜிஜு, 1962-ஆம் ஆண்டு இந்தியா-சீனா போரின்போது தனது கிராமத்தைச் சீனா ஆக்கிரமித்ததை நினைவுகூர்ந்து, அந்த அவமானத்திற்குக் காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கேட்குமா என்று முதல் கேள்வியை எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஏன் ஏழை நாடாகவே வைக்கப்பட்டிருந்தது என்பது இரண்டாவது கேள்வியாக முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏன் “பாம்பாட்டிகளின் நாடு” என்று அழைக்கப்பட்டது என்பது மூன்றாவது கேள்வியாகவும், இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஏன் “இந்து வளர்ச்சி விகிதம்” என்று இழிவுபடுத்தப்பட்டது என்பது நான்காவது கேள்வியாகவும் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு கேள்விகளுக்கும் காங்கிரஸ் கட்சி பதில் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பிரதமர் மோடி மீதான எதிர்ப்பு காரணமாக நாட்டிற்கு எதிரான கருத்துகளை ராகுல் காந்தி முன்வைப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுகிறாரா அல்லது வேறொரு நாட்டினுடையதா என்ற சந்தேகம் எழுவதாகவும் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பாரம்பரியம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் போக்கை அவர் கைவிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் விமர்சித்துள்ளார்.