ராமர் கோவில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் விவகாரம்: விவாதிக்க பயப்படும் பிரதமர், அமித் ஷா- கார்கே குற்றச்சாட்டு

உண்மை வெளிவரும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கார்கே வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி, அமித் ஷா- கார்கே
பிரதமர் மோடி, அமித் ஷா- கார்கே
Published on

ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து பதிலளிக்காமல் தவிர்ப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் "பயத்தில்" உள்ளனர் அல்லது நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தி வருவதோடு, நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளனர்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கார்கே, அவையில் இந்த விஷயத்தை எழுப்ப முயன்றாலும் அவருக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை எழுப்பிய அவர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகம், நிலம் வாங்குதல், பண நன்கொடைகள் மற்றும் மதிப்புமிக்க காணிக்கைகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. பிரதமர் மோடியே நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட முறையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

மத்திய அரசு 70 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை இந்த அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார். பூமி பூஜை முதல் கும்பாபிஷேக விழா வரையிலான ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் மோடி பங்கேற்றார்.

பிரதமர் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது

இத்தகைய சூழலில், காணிக்கைகள் திருடப்பட்டது உள்ளிட்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI), வருமான வரித்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் எங்கே உள்ளன என்பதை அவர் அவையில் விளக்க வேண்டும்.

ராமர் பெயரில் கொள்ளையடிப்பவர்கள் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் நாட்டைத் தவறாக வழி நடத்துவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு கார்கே தெரிவித்திருந்தார்.

பயப்படும் பிரதமர் மோடி, அமித் ஷா

பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட மோடியும் ஷாவும் அவைக்கு வர வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறினார்.

நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவரும் (மாநிலங்களவை) சபாநாயகரும் (மக்களவை) அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ராமர் கோயில் நன்கொடை திருட்டு மற்றும் மாணவர்கள் மீதான வன்முறை குறித்து விவாதம் நடந்தால் உண்மை தானாகவே வெளிவரும். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அரசு பீதியடைந்திருப்பதாகத் தெரிகிறது.

அதோடு மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வரவில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள் அல்லது இங்கு வராததன் மூலம் நாடாளுமன்றத்தை அவமதிக்க விரும்புகிறார்கள்" என்றார்.

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் பதிலளிக்கக் கோரி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பின.

X

Maalai Malar
www.maalaimalar.com