

2014 மக்களவை தேர்தலில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருந்தும் அதுகுறித்து பேச வேண்டாம் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தடுத்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அங்கு பேசிய அவர், தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணிக்காது.
தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று சொல்லும் தருணமே, இந்திய ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சமமாகும்.
தேர்தல் முறையில் என்ன நடக்கிறது என்பதை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.
இதற்காக அரசியல் ரீதியான பின்னடைவுகளை சந்திக்க நேரிட்டாலும், நாங்கள் போராட்டத்தைத் தொடர்வோம். இருப்பினும், தேர்தல் முறையையே நாங்கள் உடைக்க விரும்பவில்லை
2014 மக்களவைத் தேர்தல் முடிவுகளில் காணப்பட்ட வெற்றி வித்தியாசங்களை நியாயமான முறையில் விளக்க முடியாத அளவுக்கு அசாதாரணமாக இருந்தது.
அவற்றை நியாயமான முறையில் விளக்க முடியவில்லை. எனவே, சந்தேகங்கள் எழுந்தன. இருப்பினும், ஆரம்பத்தில் இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.
பின்னர் எனக்கு ஆதாரம் கிடைத்தது. அதை நான் காங்கிரஸின் அரசியல் தலைவர்களிடம் சமர்ப்பித்தபோது, அதுபற்றிப் பேச வேண்டாம் என்று அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்" என்று ராகுல் காந்தி கூறினார்.
மேலும் "இந்திய ஜனநாயகம் குறித்துக் கேள்விகளை எழுப்புவது எளிதான காரியம் அல்ல. தேர்தல் முறையில் சிக்கல் உள்ளது என்று கூறுவதற்கு 100, 200 அல்லது 300 சதவிகிதம் உறுதியான ஆதாரம் தேவை.
இந்தியாவிற்கு ஒருபோதும் வந்திராத பிரேசில் பெண் ஒருவர் இந்திய மாநிலத் தேர்தலில் 23 முறை வாக்களித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தேர்தல் செயல்முறை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
தேர்தல் ஆணையத்திற்கு உள்ளிருந்தும் எதிர்க்கட்சிகள் தகவல்களைப் பெற்று வருகின்றன. தற்போதைய அமைப்பின் கீழ் தங்களால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த அமைப்பு இனி அதிக காலத்திற்கு தொடரும் நிலையில் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் தங்களால் பணியாற்ற இயலவில்லை என தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள்கூட கூறுகின்றனர். இந்த அமைப்பு வீழ்ச்சியடைவதற்கு அதிக காலம் ஆகாது.
ஜனநாயக அமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸ் மட்டுமல்ல, பெரும்பாலான இந்தியர்களும் ஜனநாயகமற்ற இந்தியாவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை" என்றார்.