டி.கே. சிவகுமாருக்கு 'ரூட்' க்ளியர்.. மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சித்தராமையா திட்டவட்டம்

போட்டியிட வேண்டாம் என்ற தனது முடிவுக்கு வயதே முக்கியக் காரணம் என்றார்.
டி.கே. சிவகுமார், சித்தராமையா
Published on: 
Summary

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான சித்தராமையா, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

எண்ணம் இல்லை

இன்று (வியாழக்கிழமை) மைசூருக்கு சென்றிருந்தபோது ஊடகங்களிடம் பேசிய அவர், எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற தனது முடிவுக்கு வயதே முக்கிய காரணம் என்றார்.

தனக்கு இப்போது 80 வயதாகிவிட்ட நிலையில், இந்த வயதில் எப்படித் தேர்தல் களத்தில் இறங்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், சித்தராமையாவின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இருக்கை அவமானம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் ஐந்தாவது வரிசையில் சித்தராமையாவுக்கு இருக்கை ஒதுக்கியதற்காக காங்கிரஸ் மேலிடத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இதற்குப் பதிலளித்த சித்தராமையா, கட்சித் தலைமை தன்னை எந்த விதத்திலும் தாழ்வாகப் பார்க்கவில்லை என்றும் வளாகத்திற்குத் தாமதமாக வந்ததால்தான் கடைசி வரிசையில் அமர நேர்ந்தது என்றும், இதில் எந்த அரசியல் தகராறும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய முதலமைச்சர் டி.கே. சிவகுமாருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக, கட்சியால் சித்தராமையா ஓரங்கட்டப்பட்டதாக மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி மற்றும் கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலிடம் அவருக்குப் பெரும் அநீதி இழைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை சித்தராமையா முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

X