பாகிஸ்தான் வான்வழிக்கு மாற்றாக சீனா வழியாக விமானப்பாதை- இந்தியா முயற்சி

மத்திய ஆசியா மற்றும் வடக்கு ஐரோப்பா செல்லும் விமானங்களுக்கு பயன் ஏற்படலாம்.
Flight
Published on: 

கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு மூடியது.

இதனால் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பாகிஸ்தானை தவிர்த்து நீண்ட சுற்றுப்பாதையில் செல்ல வேண்டியுள்ளது.

சில விமானங்கள் அரபிக்கடல் வழியாக ஓமன் நாட்டின் மஸ்கட் நோக்கி சென்று, பின்னர் மேற்கத்திய நாடுகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயண நேரம் சுமார் 45 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை அதிகரித்துள்ளது.

இந்த கூடுதல் நேரம் காரணமாக எரிபொருள் செலவும், விமான நிறுவனங்களின் இயக்க செலவும் அதிகரித்துள்ளன.

எனவே அதற்கு மாற்றாக டெல்லி மற்றும் மும்பையில் இருந்து புறப்படும் விமானங்கள் லே பகுதி வழியாக சென்று, ஹோட்டன் அருகே சீன வான்வழிக்குள் நுழைந்து, பின்னர் கிர்கிஸ்தான் வழியாக ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்க நாடு களுக்கான விமானப் பாதைகளுடன் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த பாதை தற்போதைய சுற்றுப்பாதையைவிட குறுகியதாக இருக்கும் என்பதால், விமானங்களின் பயண நேரத்தையும், எரிபொருள் செலவையும் குறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

குறிப்பாக மத்திய ஆசியா மற்றும் வடக்கு ஐரோப்பா செல்லும் விமானங்களுக்கு பயன் ஏற்படலாம். எனினும், சீனா வழியாக சென்றால் குறைந்தது 1 மணி நேரம் பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த ஹோட்டன் வழித்தடத்தை பயன்படுத்துவது தொடர்பாக இரு நாடுக ளுக்கும் இடையே இன்னும் இறுதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை.

இந்த புதிய பாதையை பயன்படுத்த சீனாவின் ஒப்புதல் மட்டுமின்றி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளிலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங் பகுதியில் உள்ள ஹோட்டன் வழியாக இந்த புதிய பாதையை அமைப்பது குறித்து இந்தியாவும், சீனாவும் ஆலோசித்து வருகின்றன.

இதுதொடர்பாக இந்திய வெளியுற வுத்துறை அமைச்சகமும், சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com