நீங்கள் விரும்பும் போது வளைப்பதற்கு இந்தியா ஒன்றும் பலவீனமானதல்ல: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
JP Nadda - Rahul Gandhi
Published on: 
Summary

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலுயுறுத்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்தியாவை நீங்கள் விரும்பும் போதெல்லாம் வளைப்பதற்கு அது ஒன்றும் வாழைப்பழம் அல்ல என பாஜக அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிகளின் போது, முறைகேடுகள் நடந்ததாகவும், பல வாக்களர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் மற்றும் சிஜேபி உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.

மேலும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சிஜேபியை தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

போராட்டத்திற்கு தடை

இதையடுத்து ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை தடை விதித்து, டெல்லிக்குள் பேருந்துகள் நுழையவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்தியாவை நீங்கள் விரும்பும் போதெல்லாம் வளைப்பதற்கு, அது ஒன்றும் வாழைப்பழம் அல்ல என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

முட்டாள்தனமான நாடகம்

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “சலோ டெல்லி பேரணி ஜனநாயகம் என்ற பெயரில் நாட்டை அராஜகத்தில் தள்ளுவதற்கான ஒரு திட்டமிட்ட சதியாக உள்ளது.

வாக்காளர்களால் தோற்கடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கட்சிகளால் நடத்தப்படும் "முட்டாள்தனமான, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகமாக இது உள்ளது.

ராகுல் காந்தியின் அரசியல்

ராகுல் காந்தியின் அரசியல் மாதிரி என்பது முதலில் பொய்களையும் வதந்திகளையும் பரப்புவது. இரண்டாவது தெருக்களில் அராஜகத்தையும் குழப்பத்தையும் தூண்டுவது.

மூன்றாவது நாட்டின் பொருளாதாரத்தை சேதப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிலை குலைய செய்ய முயற்சிப்பது.

வாழைப்பழ குடியரசு அல்ல

ராகுல் காந்தி, கவனமாகக் கேளுங்கள், இந்தியாவில் நீங்கள் விரும்பும் போதெல்லாம் தீ வைப்பு சம்பவங்களைத் தூண்டவோ, கலவரங்களை மூட்டவோ அல்லது 'ஆட்சி மாற்றத்திற்கான' செயல்திட்டத்தை முன்னெடுக்கவோ, அது வாழைப்பழ குடியரசு அல்ல.

முதலில் கனவு காண்பதை நிறுத்துங்கள். இந்தியா உலகின் மிகப் பழமையான மற்றும் வலிமையான ஜனநாயகம். நவம்பர் 1 ஆம் தேதி, இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் மிகவும் இழிவான மற்றும் இருண்ட கறையாக நிற்கிறது.

சீக்கிய சகோதரர்கள் படுகொலை

இதே நாளில்தான், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்ட குண்டர்கள் நமது அப்பாவி சீக்கிய சகோதரர்களைப் படுகொலை செய்தனர்.

ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் ஒரே இரவில் வீடுகளை இழந்தன. ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். தேசம் அதை மறக்கவில்லை.

இன்றும் கூட, டெல்லியில் உள்ள 'விதவைகள் குடியிருப்பு' காங்கிரஸ் வரலாற்றின் அந்த பயங்கரமான மற்றும் ரத்தக்களரி அத்தியாயத்திற்கு சாட்சியாக நிற்கிறது. இன்றுவரை, காந்தி குடும்பம் அந்த பெரும் பாவத்திற்காக சீக்கிய சமூகத்திடம் ஒரு மனப்பூர்வமான மன்னிப்பை கோரவில்லை” என அவர் கூறினார்.

X