

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி டெல்லியில் போராட்டம் நடத்தியது. நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் தலைமையகத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர்.
இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். பல்வேறு கட்சியினருக்கு அழைத்து விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சி.ஜே.பி. நிறுவனர் அபிஜீத் தீப்கே, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளம் மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஜந்தர் மந்தர் நோக்கி சென்றனர்.
இதனால் விமான நிலையம், பேருந்து நிலையம் என தலைவர்கள் டெல்லி வரும் வழியிலேயே வழிமறித்து கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக சிஜேபி-யின் மிகப்பெரிய போராட்டத்தை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா ஸ்திரத்தன்மையற்ற குடியரசு (Banana Republic) நாடு அல்ல என்று பாஜக செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா banana republic அல்ல. பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தின் கீழ், இந்திய ஒருபோதும் மண்டியிட்டது இல்லை. இனிமேலும் மண்டியிடாது. இன்றைய மற்றும் அதற்கு முந்தைய மூன்று நாட்களின் நிகழ்வுகளின் அடிப்படையில், இரண்டு விஷயங்கள் தெளிவாகியுள்ளன.
ஒன்று, அராஜகத்தைத் தூண்டும் முயற்சிகளை இந்திய ஜனநாயகம் முறியடித்துள்ளது. இரண்டு, நாடு நாடாளுமன்றத்தால் ஆளப்படுமே தவிர, தெருக்களால் அல்ல.
கடந்த சில நாட்களாக டெல்லியில் இத்தகைய குழப்பமான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருந்தபோதே, இந்தத் தேர்தல்கள் அனைத்தும் நடைபெற்றன. டெல்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் ஒருவித அராஜகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலிலும் வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் பாஜக சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாங்கள் போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், உங்கள் தேர்தல் தோல்விகள் காரணமாக வீதிப் போராட்டங்களை நீங்கள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்.
இவ்வாறு ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.