இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு!

தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது.
Gold
Published on

இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. ஆனால் விற்பனை மதிப்பு ரூ.1.98 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

விலை உயர்வு

உலக தங்க கவுன்சில், 2026-ம் ஆண்டின் 2-வது காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன்) அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தங்கத்தின் தேவை

இந்தியாவில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் தங்கத்தின் மொத்த தேவை 131.4 டன்னாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த 139,7 டன்னுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவாகும்.

பிரதமர் மோடி

பருவகால அடிப்படையில் விற்பனை குறைந்தது. இறக்குமதி சுங்க வரி உயர்வு மற்றும் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்திருந்த வேண்டுகோள் ஆகியவை தங்கத்தின் தேவை குறைய முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

புதிய சாதனை

ஆனால், தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், வாங்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலத்தில் ரூ.1.32,500 கோடியாக இருந்த தங்க விற்பனை மதிப்பு, இந்த ஆண்டு 50 சதவீதம் அதிகரித்து ரூ.1,98,100 கோடியாக உயர்ந்துள்ளது.

முதலீடு

தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது. இருப்பினும், விலை உயர்வு காரணமாக நகை விற்பனையின் மதிப்பு 34 சதவீதம் உயர்ந்து ரூ.1,13,210 கோடியாக உள்ளது. அட்சய திருதியை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நகை வாங்கும் பழக்கம் தொடர்ந்தாலும், அதிக விலையால் மக்கள் குறைந்த எடையிலான மற்றும் குறைந்த காரட் நகைகளை அதிகம் வாங்கியதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

கோல்டு இ.டி.எப். முதலீடு

மறுபுறம், முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்க கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களின் தேவை 9 சதவீதம் அதிகரித்து 50,3 டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல், கோல்டு இ.டி.எப். முதலீடும் 49 சதவீதம் அதிகரித்து 4.2 டன்னாக பதிவாகியுள்ளது. இது தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மக்கள் தொடர்ந்து கருதுவதை காட்டுகிறது.

இந்தியாவின் தங்க இறக்குமதி 23 சதவீதம் குறைந்து 98.1 டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 127.4 டன்னாக இருந்தது. பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து பயன்படுத்திய அளவும் 17 சதவீதம் குறைந்து 19.2 டன்னாக பதிவாகியுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com