

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.
இன்று தனது 136-வது பதிவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பாதுகாப்பில் புதிய உச்சம் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்றுமதி அல்லது நட்பு நாடுகளுடனான அரசியல் ஒத்துழைப்பு என எதுவாக இருந்தாலும் இந்தியா தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்தியா ஒரு நம்பகரமான உலகளாவிய பாதுகாப்புத் துறை கூட்டாளியாக உருவெடுத்து வருகிறது. மேலும் தனது பாதுகாப்பு திறன்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நான் இந்தோனேசியாவில் இருந்தேன்.
அங்கு பிரம்மோஸ் மற்றும் அஸ்தரா ஏவுகணைகள் தொடர்பான ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஐ.என்.எஸ். மகேந்திரகிரி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நவீன போர்க்கப்பல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 75 சதவீதத்திற்கு அதிகமானவை உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டது.
இந்த மாதத்தில் நீண்ட தூரம் சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ‘பினாகா’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வெற்றிக்கரமாக சோதித்தது.
இந்த வெற்றிக்கு பின்னால் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு உழைப்பு உள்ளது. 2 அல்லது 3 நாட்களுக்கு முன்புதான் டி.ஆர்.டி.ஓ. குஷா ஏவுகணையையும் வெற்றிக்கரமாக சோதித்தது.
கடந்த வாரம் ‘விக்ரம் 1’ வெற்றிக்கரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் அடைந்தனர். இந்தியாவின் விண்வெளி துறையில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் இதுவாகும்.
தனியார் துறையால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் இதுவாகும். ஒரு காலத்தில் கற்பனை செய்வதற்கே கடினமாக இருந்த ஒன்றை இன்று சாதித்து உள்ளனர்.
கார்கில் வெற்றி தினம் நம்மை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. நமது துணிச்சலான வீரர்களின் அசாதாரண வீரத்தை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு முன்னதாக நீங்கள் எனக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளை அனுப்புகிறீர்கள். இந்த ஆண்டும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி இயக்கம் ஒட்டுமொத்த தேசத்தையும் உணர்வுடன் ஒன்றிணைத்தது. ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் மூவர்ண கொடியை கொண்டாடும் சூழல் காணப்படுகிறது.
இந்த ஆண்டும் வீடுகளில் மூவர்ண கொடியை மிகுந்த மரியாதையுடன் ஏற்ற வேண்டும். பாரத ரத்னா அப்துல் கலாமின் நினைவுநாள் நாளையாகும். பெரிய கனவுகளை காணுமாறு அவர் இளைஞர்களையும், குழந்தைகளையும் ஊக்குவித்தார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.