

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விண்வெளி ஆய்வு நடவடிக்கையில் தனியார் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் கீழ் இயங்கும் இன்ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) ஐதராபாத்தை சேர்ந்த புத்தாக்க நிறுவனமான ஸ்கைருட் ஏரோஸ் பேஸ் நிறுவனத்துக்கு ராக்கெட் தயாரிப்புக்கான ஒப்புதலை அளித்தது.
இதையடுத்து “பிராரம்ப்” என்ற பெயரிலான திட்டம் மூலம் புதிய ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ஸ்கைருட் ஈடுபட்டு வந்தது. அந்த வகையில் வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டன.
அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் என்று பெயரிடப்பட்டது. அதில் அதிகபட்சம் 480 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய விக்ரம் எஸ் ராக்கெட் சோதனை முயற்சியாக கடந்த 2022-ல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விக்ரம்-1 ராக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்தது.
இந்த நிலையில் இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக தனியார் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தில் இருந்து இன்று மதியம் 12.05 மணிக்கு புவியின் தாழ்வட்ட பாதை நோக்கி ஏவப்பட்டது.
காலை 11.30 மணிக்கு ஏவப்பட இருந்த இந்த ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 35 நிமிட தாமதத்திற்கு பிறகு விக்ரம்-1 விண்ணில் பாய்ந்தது.
பிரதமர் மோடி அனுப்பிய தபால் அட்டை உட்பட பல தொழில்நுட்ப செயல் விளக்க பொருட்களையும் வெற்றிகரமாக புவியின் தாழ்சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஒரு மாபெரும் வெற்றி என்று அந்த நிறுவனமும் அறிவித்து உள்ளது.
கிரகாபேஸ் காஸ்மோ சர்வ், டி-கியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் ஸ்கோப் ஆகியவற்றின் தொழில்நுட்ப செயல் விளக்க கருவிகளான முதன்மை பேலோடுகள் 450 கிலோ மீட்டர் தாழ் புவியின் சுற்றுப்பாதையில் நிலையாக நிறுத்தப்பட்டன.
வந்தே மாதரம் என்ற செய்தியை கொண்ட பிரதமர் மோடியின் கையெழுத்து அஞ்சல் அட்டை என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி வீரர்கள் அஞ்சல் அட்டைகளுடன் வெற்றிகரமாக நிலைநிறுத்தினர்.
மொத்தம் 4 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் உயரம் 24 மீட்டர் ஆகும். 350 கிலோ வரையிலான செயற்கைகோள்களை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த ராக்கெட்டின் என்ஜின்கள் முப்பரிமாண அச்சு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.
ஸ்கைரூட் நிறுவனம் கூறும்போது, “இந்தியாவின் அறிவியல் மற்றும் விண்வெளி பயணத்தை வடிவமைத்த 3 தொலைநோக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் முன்னோடியான
விக்ரம் சாராபாய், விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் நுண் சிற்பங்களை கொண்ட் சிறிய பேலோடு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.