சவுதி அரேபியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்தியர் உயிரிழந்த விவகாரம்: இந்தியா கடும் கண்டனம்

எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தொடர் தாக்குதல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
saudi attacked
Published on: 

சவுதி அரேபியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒரு இந்தியர் உயிரிழந்ததற்கும், மூன்று பேர் காயமடைந்ததற்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை இலக்காக கொண்ட இத்தகைய தாக்குதல்கள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும், அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

வெளியுறவு அமைச்சக தகவல்படி, தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஓர் இந்தியர் உயிரிழந்தார், இருவர் காயமடைந்தனர். அதேபோல், சவுதி அரம்கோவின் ஷாய்பா எண்ணெய் வயலில் நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொரு இந்தியர் காயமடைந்தார்.

கடும் கண்டனம்:

"அக்டோபர் 21 அன்று தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சவுதி அரம்கோவின் ஷாய்பா எண்ணெய் வயல் உள்ளிட்ட, சவுதி அரேபியாவின் பொதுமக்களுக்கான மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தொடர் தாக்குதல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, இந்த தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறுகையில், "தம்மாம் விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் ஓர் இந்தியர் உயிரிழந்தார், இருவர் காயமடைந்தனர். ஷாய்பா எண்ணெய் வயல் மீதான தாக்குதலில் மற்றொரு இந்தியர் காயமடைந்தார். பொதுமக்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை; அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

சவூதி அரேபியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் அந்நாட்டு மக்களுடனும் அரசாங்கத்துடனும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். அந்த பிராந்தியத்தில் அமைதியும் இயல்பு நிலையும் விரைவில் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று தெரிவித்தது.

தொடர்ந்து வலியுறுத்தல்:

கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து தொடங்கிய மேற்கு ஆசிய மோதலில், இதுவரை 11 மாலுமிகள் உட்பட 19 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலுக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை புதன்கிழமை உத்தரவிட்டது. இது, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com