

தான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும் என்றும், ஆனால் அத்தகைய நடவடிக்கை மக்களுக்கு பயனளிக்காது என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் அம்மாநில திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை நினைவுக்கூர்ந்த சந்திரபாபு நாயுடு, அது தனது வாழ்வில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய சம்பவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கோனசீமா மாவட்டம், அம்பாஜிபேட்டா மண்டலத்திலுள்ள பாண்டுவாரிபேட்டா கிராமத்தில் மக்களிடையே உரையாற்றிய அவர்.,
“ஜெகன் மோகன் ரெட்டியிடம் நான் மென்மையாக நடந்துகொள்வதாக சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், எனக்கு அதிக பொறுமை உண்டு.
நான் செய்யும் எதுவாக இருந்தாலும் அது தெலுங்கு மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றே எப்போதும் நினைக்கிறேன்.
என் வாழ்நாளில் எனக்கு நடக்கவேக்கூடாது என்று நான் நினைத்த ஒன்று, நான் 53 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவித்தபோது நடந்தது. என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.
அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் என் மீதான வழக்குகளில் எந்தத் தவறும் இல்லை என்று கண்டறிந்தன.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை முதலமைச்சராக இருந்தபோதே, தனது மகனை பெங்களூருவில் தள்ளி வைத்திருந்தார் என்றும், அவரை ஆந்திரப் பிரதேசத்திற்கு வர அனுமதிக்கவில்லை என்றும் கூறும் உண்மையில் இருந்தே மக்கள் அவருடைய குணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் அமைச்சர் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டபோது, நான் முதலமைச்சராகப் பணியாற்றிய போதிலும், அதற்காக என் மீது பழி சுமத்தப்பட்டது.
ஜெகன் ரெட்டி சொத்துக்காகத் தன் சொந்தத் தாயையும், சகோதரியையும் கூட ஏமாற்றியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு மனிதருடன் நான் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
என்னால் ஜெகன் மோகன் ரெட்டியை ஒரு நிமிடத்தில் கைது செய்ய முடியும். ஆனால், நான் மாநிலத்தில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை.
உண்மை வென்றுவிட்டது. அன்றைய அந்த இருண்ட நாட்களை நினைவுகூர்கையில்... எனக்கு ஆதரவளித்த தெலுங்கு சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழிவாங்கும் அரசியலை விடுத்து அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஆந்திராவை இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் உலகளவில் தெலுங்கு மக்கள்தான் அதிக தனிநபர் வருமானத்தை பெறுவார்கள் என நான் நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், 2023ம் ஆண்டு செப்.9ம் தேதி ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசால் கைது செய்யப்பட்டார்.