திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
விழாவின் முதல் நாளன்று ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்கிறார்.
இந்த வருகையின் போது, திருப்பதி மலையில் ரூ.900 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய அதிநவீன கட்டிடங்கள் மற்றும் வசதிகளை அவர் திறந்து வைக்க உள்ளார்.
டி.சி.எஸ் நிறுவனத்தின் ₹145 கோடி நிதி மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன், உலகளாவிய பக்தர்களைக் கவரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.
அதே வேளையில், உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு தயாரிக்கத் தொடங்கி 310 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு லட்டு திருவிழாவில், ஆந்திர மாநில முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒரு சிறப்பு தங்க நாணயத்தை வெளியிடுகிறார்.
திருப்பதிக்கு வரும் சாதாரண பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் சுமார் ரூ.600 கோடி இமாலய நிதிச் செலவில், ஒரே நேரத்தில் 10,000 பக்தர்கள் தங்கும் வகையிலான பிரம்மாண்ட புதிய விடுதிகள் வளாகம் திருமலையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் விடுதி திறக்கப்படுவதன் மூலம் திருப்பதி மலையில் நிலவி வரும் தங்கும் அறைகளுக்கான தட்டுப்பாடு இனி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் ரூ.120 கோடி நிதியுதவியுடன் திருப்பதியில் ஒருங்கிணைந்த உயர் தொழில்நுட்ப சமையலறைகள் கட்டப்பட்டுள்ளதுடன், அவரது மகன் ஆனந்த் அம்பானி ரூ.27.5 கோடி மதிப்பில் நவீன மின்சார பஸ்களை திருமலைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த மின்சார பஸ்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில், இவற்றை இயக்குவதற்காக 50 புதிய பஸ் டிரைவர்கள் நியமிக்கப்பட்டு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.
திருப்பதி திருமலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 81,064 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் டோக்கன் பெற்று சுமார் 18 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்துள்ளனர்.
மேலும் நேற்று 33,136 பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தியுள்ளனர், பக்தர்களின் காணிக்கை மூலம் உண்டியல் வருவாயாக ரூ. 5.36 கோடி வசூலாகியுள்ளதுடன், சாதனை அளவாக 4.09 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.