விமான கட்டணம் உயர்வு தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தின் பதிலால் அதிருப்தி

இந்த கட்டண உயர்வு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-ன்கீழ் உள்ள சமத்துவ உரிமையைப் பாதிப்பதாக வாதாடினார்.
Supreme Court
Published on: 

விமானக் கட்டணங்கள் 700% வரை உயர்ந்துள்ளதாகக் கூறித் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்ததுடன், "விமானத்தில் பயணிக்க வேண்டாம்" என்று மனுதாரரின் வழக்கறிஞரிடம் வாய்மொழியாகக் கூறியுள்ளது

தீபாவளி மற்றும் பண்டிக்கை காலங்களில் உள்நாட்டு விமானக் கட்டணமானது வரலாறு காணாத வகையில் உயர்ந்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட அவசர மனு மீதான விசாரணையின்போது இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மனுதாரரின் வாதம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த விவகாரம் அவசரப் பட்டியலிடக் கோரி முறையிடப்பட்டது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பண்டிகைக் காலங்களில் விமானக் கட்டணங்கள் 700 சதவீதம் வரை அநியாயமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தற்காலத்தில் விமானப் பயணம் என்பது பலருக்கும் ஒரு 'அத்தியாவசியச் சேவை' ஆக மாறிவிட்டதால், இந்த கட்டண உயர்வு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-ன்கீழ் உள்ள சமத்துவ உரிமையைப் பாதிப்பதாக வாதாடினார்.

விமானத்தில் பயணிக்காதீர்கள்

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி விக்ரம் நாத், "சரி, அப்படியென்றால் விமானத்தில் பயணிக்க வேண்டாம். அடுத்த வழக்கைப் பாருங்கள்" என்று கூறி, அந்த மனுவை அவசரமாகப் பட்டியலிட மறுத்து நிராகரித்தார்.

சமூக ஆர்வலர் எஸ். லட்சுமிநாராயணன் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு பொதுநல வழக்கு நிலுவையில் உள்ளது. தனியார் விமான நிறுவனங்கள் தங்களின் விருப்பம்போல கட்டணங்களை உயர்த்துவதைக் கட்டுப்படுத்தவும், பயணிகளின் நலனைப் பாதுகாக்கவும் ஒரு வலுவான தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது

இதற்கிடையே, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு ஒரு முக்கியத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையை முறைப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 'பாரதிய வாயுயான் அதினியம், 2024' (Bharatiya Vayuyan Adhiniyam, 2024) சட்டத்தின்கீழ் புதிய விதிகள் உருவாக்கப்பட்டு அதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண விதிகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முக்கிய வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X