விமானக் கட்டண விதிகளுக்கு நிர்வாக ஒப்புதல்: அடுத்த 2 வாரங்களில் வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

வழக்கின் விசாரணையின்போது வரைவு விதிகளைச் சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
Airfare rules
Published on: 
Summary

விமானக் கட்டணங்களை சீரான முறையில் நிா்ணயிக்க வகை செய்ய இந்திய வானூா்தி சட்டம் 2024-இன் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களுக்குள் இந்த விதிகள் வெளியிடப்படும்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் விமானக் கட்டணங்களை சீரான முறையில் முறைப்படுத்தவும் நிர்வகிக்கவும் வகை செய்யும் இந்திய வானூர்தி சட்டம் 2024-இன் கீழ் வகுக்கப்பட்டுள்ள புதிய விதிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர்மகாதேவன், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புதிய விதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த விதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள், வெளியிடப்படும் இறுதி விதிகளை வழக்கின் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற நவம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தனியார் விமான நிறுவனங்கள் தங்களது இஷ்டப்படி தாறுமாறாகக் கட்டணங்களை நிர்ணயித்து பயணிகளிடம் வசூலிப்பதாகவும், இதனால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர் எஸ்.லட்சுமிநாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். விமானப் போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பயணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கவும் சுதந்திரமான அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

கடந்த மே மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விமானக் கட்டணங்கள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்றும், பயணிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் அறிவுறுத்தல்களை வழங்கியது. அதற்குப் பதிலளித்த மத்திய அரசு தரப்பு, 2024-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டம் 2025 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அதற்கான கட்டண ஒழுங்குமுறை வரைவு விதிகள் தயாராகி வருவதாகவும் தெரிவித்திருந்தது.

முன்னதாக, வழக்கின் விசாரணையின்போது வரைவு விதிகளைச் சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படியே மத்திய அரசும் வரைவு விதிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி இந்த விதிகளை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, கட்டண ஒழுங்குமுறை ஆணையம் குறித்த தெளிவான தகவல் இல்லை என்று சுட்டிக்காட்டி விசாரணையை ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது புதிய விதிகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அவை வெளியிடப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளதால், விமானக் கட்டண உயர்வு விவகாரத்தில் விரைவில் ஒரு தெளிவான ஒழுங்குமுறை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com