ராஜீவ் காந்தியை முதல் முதலில் சந்தித்தது எப்படி?.. வீடியோவில் காதல் கதையை பகிர்ந்து சோனியா காந்தி

‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை புத்தகம் வரும் நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது.
ராஜீவ், சோனியா
Published on: 
Summary

கணவர் ராஜீவ் காந்தியுடனான காதல் கதையை சோனியா காந்தி புதிதாக தொடங்கிய எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கியுள்ளார்.

நேற்று அவர் கணக்கு தொடங்கியதும் அவர் வெளியிட்ட முதல் பதிவு வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்ட 2 நிமிட வீடியோ பதிவில், மறைந்த தன் கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை முதல் முதலில் சந்தித்தது குறித்தும் அவருடன் எப்படி காதல் மலர்ந்தது என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார்.

சந்திப்பு

ராஜீவ் காந்தியை தங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் தனக்கு அறிமுகப்படுத்தியதாக கூறிய அவர், ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாகப் பழகியதையும், நண்பர்களுடன் விருந்துகளுக்குச் சென்றதையும், சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

வீடியோவில் பேசும் சோனியா, அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் உணவுகள் அவ்வளவு சிறப்பாக இருக்காது. இன்றைக்கு இருப்பதைப் போல ஏராளமான உணவகங்களும் அப்போது இல்லை. எனக்குப் பிடித்த இத்தாலிய உணவுகளைச் சாப்பிடுவதற்கு ஏற்ற இடத்தைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போது, ஐரோப்பிய மாணவர்கள் மட்டுமின்றி இந்திய மாணவர்களும் உணவருந்த செல்லும் ‘Varsity Restaurant’ என்ற கிரேக்க உணவகத்தை தானும் தன் நண்பரும் கண்டறிந்ததாகவும், அங்குதான் ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜீவுடன் காதல்

அந்த முதல் சந்திப்பிலேயே ராஜீவ் காந்தியுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாகவும், அதே உணர்வு ராஜீவ் காந்திக்கும் இருந்ததைப் பின்னர் அறிந்துகொண்டதாகவும் சோனியா காந்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "ராஜீவும் நானும் அன்பு, சிரிப்பு, நினைவுகள் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கினோம். அவர் மிகவும் அழகானவர்.

அதே நேரத்தில், அவரிடம் இருந்த மென்மையான குணமும் வெளிப்பட்டது. அந்தப் பண்புதான் என்னை மிகவும் அவரிடம் கவர்ந்தது. அவரை முதன்முதலில் சந்தித்த அந்தத் தருணத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுயசரிதை

சோனியா காந்தி தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை புத்தகம் வரும் நவம்பர் 10ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

அதில் ராஜீவ் அறிமுகம், இந்திரா காந்தியுடன் அறிமுகம், இந்திய அரசியலில் ஈடுபாடு, பிரதமர் பதவியை மறுத்தது ஆகியவை குறித்து மேலும் விரிவாக அவர் எழுதியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com