

ஹர்தீப் சிங் பூரி உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிரதிநிதியாகத் தான் வகித்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலகினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரி, உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து வகித்து வந்த ராஜ்யசபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்யசபா செயலகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மத்திய பிரதேசம் ராஜ்யசபா இடைத்தேர்தலில் ஹர்தீப் சிங் பூரி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து காலியான அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஹர்தீப் சிங் பூரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற இரண்டு வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிரதிநிதியாகத் தான் வகித்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலகினார். ஹர்தீப் சிங் பூரி அளித்த ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா அவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றச் செயலகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராஜினாமா நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களின் எம்பியாக இருக்க முடியாது என்பதால், அவர் தனது முந்தைய உத்தரப்பிரதேச இருக்கையைத் துறந்துவிட்டு, தற்போது மத்திய பிரதேசம் சார்பாக மேல்சபையில் தொடரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.