

ஞானேஷ் குமாரை பிரதமர் ஆக்க வேண்டும் என பவன் கேரா தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையின் போது, இரண்டு தேர்தல் ஆணையர்கள் தங்கள் பெயர்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த சூழலில் மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சமிக் பட்டாச்சார்யா ஞானேஷ் குமார் "குறைந்தபட்சம்" பத்ம பூஷண் விருதுக்கு தகுதியானவர் என்று அவருக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
மாநிலத்தில் வன்முறையற்ற சட்டமன்ற தேர்தலை உறுதி செய்ததற்காகவும், வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத வங்கதேசத்தினரை நீக்கி அதை "தூய்மைப்படுத்தியதற்காகவும்" அவர் பாராட்டினார்.
சமிக் பட்டாச்சார்யாவின் கூற்றை கிண்டல் செய்துள்ள காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பத்ம பூஷண் என்பது மிகவும் சிறிய விஷயம். அவரை நாட்டின் பிரதமர் ஆக்க வேண்டும். மற்றவர்களை பிரதமர் ஆக்கும் வல்லமை கொண்ட அவரே பிரதமர் ஆக்கப்பட வேண்டியர்" என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.