விளையாட்டின் போது விபரீதம்: 3 வயது சிறுமியின் நெஞ்சில் பாய்ந்த கத்தரிக்கோல்!

சிறுமியின் நெஞ்சில் சிக்கிய கத்தரிக்கோல், ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை
Pediatric Surgery
Published on: 
Summary

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர், தனது 5 வயது அண்ணனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது நெஞ்சில் கத்தரிக்கோல் ஆழமாகப் பாய்ந்து சிக்கிக்கொண்டது.

அச்சிறுமிக்கு அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கத்தரிக்கோல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

விளையாட்டின் போது நேர்ந்த கொடூரம்

சிறுமி தனது அண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, கூர்மையான கத்தரிக்கோல் அவரது நெஞ்சுப் பகுதியில் பலமாகப் பாய்ந்து, உள்ளே ஆழமாகச் சிக்கிக் கொண்டது.

உடனடியாகக் பதறிப்போன குடும்பத்தினர், சிறுமியை முதலில் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிய கத்தரிக்கோல்

இது குறித்து சிவில் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், கத்தரிக்கோல் பாய்ந்திருந்த இடம் மிகவும் ஆபத்தானது. சிறுமியின் மூச்சுக்குழாய் , நுரையீரல் மற்றும் விலா எலும்புக் கூடு போன்ற முக்கிய உள் உறுப்புகளுக்கு மிக அருகில் அது சிக்கியிருந்தது.

முறையான அறுவைச் சிகிச்சை இல்லாமல் அதை அப்படியே வெளியில் எடுக்க முயன்றிருந்தால், மூச்சுக்குழாய் கிழிந்து, கடுமையான உள் ரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமியின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும்.

வெற்றிகரமான அறுவை சிகிச்சை

மருத்துவக் குழுவினர் மிகவும் எச்சரிக்கையுடன், அதிநவீன அறுவைச் சிகிச்சை முறையைப் பயன்படுத்திச் சிறுமியின் நெஞ்சில் இருந்த கத்தரிக்கோலை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் அறிவுரை!

இந்தச் சம்பவத்தையடுத்து மருத்துவர்கள் பெற்றோருக்கு இரண்டு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

சிறு குழந்தைகள் விளையாடும்போது அவர்கள் அருகில் கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்ற கூர்மையான பொருட்கள் இல்லாதவாறு பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் எப்போதும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

தவறுதலாக ஏதேனும் கூர்மையான பொருட்கள் உடலில் பாய்ந்துவிட்டால், அதை வீடுகளில் உள்ளவர்களே வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கக் கூடாது. அது உள் உறுப்புகளை மேலும் சேதப்படுத்தி, ரத்தப்போக்கை அதிகமாக்கிவிடும். உடனடியாகப் பாதிப்புக்குள்ளானவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

X