

முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ் என பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தைச் சாடியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியுள்ளதாவது:
முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ்.
ஒவ்வொரு முறையும் அதே பாணிதான். ஒரு கட்சியைப் பிளவுபடுத்த பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கைகோர்க்கின்றன. பின்னர், அக்கட்சியின் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது.
ஒரு முழு கட்சியையே அபகரிக்க முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளும் திருடப்படக்கூடும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
வாக்குத் திருட்டு, அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு. இவை அனைத்தும் நமது ஜனநாயக சரிவின் அடையாளங்களாக மாறிவிட்டன.
மக்களின் தீர்ப்பை பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு சார்ந்த கடமை. ஆனால் அதற்கு மாறாக, மக்களின் தீர்ப்பை தலைகீழாக மாற்றும் சக்திகளுக்கே அது துணை நிற்கிறது.
இந்தப் போராட்டம் மம்தா பானர்ஜியுடையது மட்டுமல்ல. சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது என பதிவிட்டுள்ளார்.