சுதந்திரத்திற்கு பிந்தைய முதல் பத்தாண்டுகளில் 4 சதவீதத்தை கடந்த விவசாய வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டின் தானிய கிடங்குகளை நிரப்புவதை கண்டு மட்டுமே அந்த அரசாங்கங்கள் 'திருப்தி' அடைந்திருந்தன.
PM Modi
Published on: 

சுதந்திரத்திற்கு பிந்தைய காலக்கட்டத்தில், கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே இந்திய விவசாயம் ஆண்டுக்கு 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை கண்டுள்ளது என்றும், இந்த காலகட்டத்தில் ஏராளமான சிறு விவசாயிகள் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

'இந்தியா டுடே' குழுமம் ஏற்பாடு செய்திருந்த 'கிசான் தக் பாரத்' விவசாய மாநாட்டில் பேசிய பிரதமர், உலக வங்கி ஆய்வு ஒன்றை குறிப்பிட்டு, கடந்த 12-13 ஆண்டுகளில் 50 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளதாகவும், கிராமப்புறங்களில் வறுமை இன்னும் வேகமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

"விவசாயம் என்பது நமது கலாச்சாரம், நமது பாரம்பரியம் மற்றும் நமது சமூக வாழ்வின் அடிப்படை" என்று கூறிய அவர், விவசாயத்தை மேலும் 'நவீனமயமாக்காமல்' மற்றும் விவசாயிகளை 'சுயசார்பு' கொண்டவர்களாக மாற்றாமல், ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

உலகிலேயே முதலிடம்:

செங்கோட்டையில் இருந்து தான் குறிப்பிட்ட 'ஏழு ஆற்றல் நீரோட்டங்களில்' விவசாயத்தை முதன்மையான நீரோட்டமாக பிரதமர் மோடி விவரித்தார். முந்தைய அரசாங்கங்களை விமர்சித்த அவர், சந்தை, தொழில்நுட்பம், வானிலை மற்றும் மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் மாறிய போதிலும், விவசாயிகள் நாட்டின் தானிய கிடங்குகளை நிரப்புவதை கண்டு மட்டுமே அந்த அரசாங்கங்கள் 'திருப்தி' அடைந்திருந்தன என்று கூறினார்.

"தானியக் கிடங்குகளை நிரப்புவது மட்டுமே போதாது" என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளின் சாதனைகளைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியா ஆண்டுதோறும் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதாகவும், பால், பருப்பு வகைகள், சணல், அரிசி, கோதுமை, பருத்தி, பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன் உற்பத்தியில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பதாகவும், சிறுதானிய உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் பால் உற்பத்தி 70 சதவீதமும், முட்டை உற்பத்தி 90 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும், மீன் உற்பத்தி இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும் மோடி கூறினார்.

இயற்கை விவசாயம்:

மேலும், 'PM-KUSUM' திட்டத்தின் கீழ் சுமார் 12 லட்சம் சூரியசக்தி பம்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 2014-இல் மிக சிலவாக இருந்த மண் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை தற்போது 8,400-க்கும் மேலாக உயர்ந்துள்ளது என்றும், 7,500-க்கும் மேற்பட்ட 'கிருஷி விக்யான் கேந்திராக்கள்' செயல்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், 10,000 'விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள்' உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். அப்போது அவர், "நமது தாயை நம் கண்முன்னே நாமே கொன்று கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

X