மசூதி இடிப்பு - உத்தரப் பிரதேசத்தில் வெடித்த அரசியல் சர்ச்சை

உயர் நீதிமன்றத்திற்கு செல்வதைத் தடுக்கவே அதிகாலையில் திருட்டுத்தனமாக இடித்துள்ளனர்.
அகிலேஷ் யாதவ், மசூதி இடிப்பு, யோகி
அகிலேஷ் யாதவ், மசூதி இடிப்பு, யோகி
Published on
Summary

உத்தரப் பிரதேசத்தின் சகாரன்பூரில் நேற்று அதிகாலையில் மசூதி ஒன்று இடிக்கப்பட்ட விவகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த மசூதியை மாவட்ட நிர்வாகம் நேற்று அதிகாலை 5 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியுள்ளது.

இடிப்பு

சகாரன்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் 5 பிரதான நுழைவு வாயில்களையும் பூட்டி, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகள் இடிப்புப் பணியை முடித்தனர்.

அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமித்து கட்டடப்பட்டிருந்ததாலேயே கட்டுமானத்தை அகற்றியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி

இந்த மசூதி அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி 2025-இல் பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் விகாஸ் தியாகி மனுத் தாக்கல் செய்தார்.

விசாரணைக்குப் பின், ஜூலை 16 அன்று அந்த மசூதி ஆக்கிரமிப்புக் கட்டிடம் என உறுதிசெய்து, அதை இடிக்கச் சகாரன்பூர் நகர மெஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மசூதி கமிட்டி மாவட்ட நீதிமன்றத்தை அணுகிய நிலையில், செப்டம்பர் 2 அன்று நீதிமன்றம் அவர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

அவசர அவசரமாக

மசூதி கமிட்டி உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறுவதைத் தடுப்பதற்காகவே அரசு அதிகாலையில் இந்த இடிப்பு நடவடிக்கையை அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது என எதிர்க்கட்சிகள், யோகி ஆதித்யநாத் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன.

குற்றச்சாட்டு

ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, "பாஜக அரசுக்கு 'மசூதி' என்ற வார்த்தை மீதே வெறுப்பு உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு செல்வதைத் தடுக்கவே அதிகாலையில் திருட்டுத்தனமாக இடித்துள்ளனர். மசூதி கமிட்டிக்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்." என சாடியுள்ளார்.

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுக ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அரசின் உத்தரவுக்கு ஏற்ப அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நீதியைத் தடுத்துள்ளனர். பிற மதங்களை மதிக்காதவர்கள் ஒருபோதும் சனாதனிகளாக இருக்க முடியாது." என தெரிவித்துள்ளார்.

பதற்றம்

இதனிடையே பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சகாரன்பூர் சரக டி.ஐ.ஜி அபிஷேக் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com