

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் கஞ்ச் ஷஹீதா உட்பட இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாக பாகிஸ்தான் குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி கவலை தெரிவித்திருந்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவின் சிதைவுக்கும், நிரந்தரமான குழப்ப நிலைக்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்த அவர், அவற்றை உடனடியாக நிறுத்துமாறு இந்தியாவைக் கேட்டுக்கொண்டார்.
மேலும், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் மசூதி இடிப்பு குறித்து பாகிஸ்தான் குடியரசு தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "பாகிஸ்தான் குடியரசு தலைவர் தெரிவித்துள்ள தேவையற்ற கருத்துக்களை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. தன் சொந்த நாட்டில் மனித உரிமைகளைக் காக்கத் தவறிய பாகிஸ்தான், இந்தியாவைப் பார்த்துக் குறை கூறுவது அபத்தமானது.
பல்வேறு மதங்களைச் சார்ந்த சிறுபான்மையினரைத் திட்டமிட்டுக் குறிவைத்து, அவர்களைப் பலியாக்கும் பாகிஸ்தானின் வரலாற்றை மறைத்துவிட்டு பாகிஸ்தான் குடியரசு தலைவர் தற்போது பேசியிருப்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் அரசியல் தாக்குதல் மட்டுமே ஆகும்" என தெரிவித்துள்ளார்.