

திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதியடையும் நிலை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல் நினோவின் தாக்கத்தால் திருப்பதி மலையில் உள்ள 5 நீர்த்தேக்கங்களிலும், திருப்பதியில் உள்ள கல்யாணி அணையிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது.
இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் நீர் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்குவதற்காக திருப்பதி மலையில் தனியார் மடங்கள் மூலம் அறைகள் கட்டப்பட்டு உள்ளன.
தனியார் மடங்களுக்கு நீர் விநியோகம் குறைந்துள்ளதால், கர்நாடக சத்திரங்களின் 2 தொகுதிகளில் உள்ள 200 அறைகளுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 34 மடங்களில் பாதி அறைகள் மட்டுமே பக்தர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
தற்போது, திருப்பதி மலையில் 110 நாட்களுக்குப் போதுமான நீர் உள்ளது. வடகிழக்கு பருவமழை முடிவதற்குள் மழை பெய்யாவிட்டாலோ அல்லது மாற்று நீர் ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலோ, மடங்களில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதும், பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள் ஒதுக்குவது நிறுத்தப்படும். இதனால் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதியடையும் நிலை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதியில் நேற்று 84,014 பேர் தரிசனம் செய்தனர். 30,116 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.08 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.