

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் விரைவாக 3 முதல் 4 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு காலை, மாலை 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடந்து வருகிறது.
இதனால் திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சாதாரண பக்தர்களும் விரைந்து தரிசனம் செய்வதற்காக வைகுந்தம் வரிசை அறைகள் 1,2 ஆகியவை மற்றும் சாதாரண பக்தர்களின் வரிசைகள் ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் வி.ஐ.பி இடைவேலை தரிசனம், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ராணுவத்தினர் மற்றும் பிற பிரிவினர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் விரைவாக 3 முதல் 4 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 84,289 பேர் தரிசனம் செய்தனர். 31, 474 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.53 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.