விடுதலையை எதிர்த்த வழக்கு - பிரிஜ் பூஷன் பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் அவகாசம்

கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை விடுவித்து தீர்ப்பளித்தது
Brij Bhushan
Published on: 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில், டெல்லி நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த விடுதலையை எதிர்த்து பெண் மல்யுத்த வீராங்கனைகள் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

அவகாசம் வழங்கிய டெல்லி நீதிமன்றம்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வழங்கப்பட்ட விடுதலையை எதிர்த்து 4 பெண் மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் இன்று (அக்டோபர் 9, 2026) அவகாசம் வழங்கியுள்ளது.

விசாரணை ஒத்திவைப்பு

பிரிஜ் பூஷன் சிங் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, இந்த வழக்கை அக்டோபர் 28 ஆம் தேதிக்கு நீதிபதி திக் வினய் சிங் ஒத்திவைத்தார்.

அரசு தரப்பு நிலைப்பாடு

இந்த விடுதலையை எதிர்த்து டெல்லி போலீஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், அதுபற்றி நீதிமன்றத்திற்கு தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.

விசாரணை ரகசியமாக நடைபெறும்

இந்த மேல்முறையீட்டு வழக்கின் வாதங்கள் தொடங்கப்பட்டதும், விசாரணைகள் அனைத்தும் மூடிய நீதிமன்ற அறைக்குள் (In-camera) ரகசியமாக நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது ஜனவரி 2023-ல் போராட்டம் தொடங்கப்பட்டு, டெல்லி ஜந்தர் மந்தரில் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 3, 2026 அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பிரிஜ் பூஷன் சிங் மற்றும் இணை-குற்றவாளி வினோத் தோமர் ஆகியோரை விடுதலை செய்தது.

இந்த விடுதலையை எதிர்த்து 4 பெண் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் மெல்முறையிட்டிற்கு பதிலளிக்க பிரிஜ் பூஷன் ஷரன் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com