உயிர் பயத்தை மீறி கிளிஞ்சல் வேட்டை: வாழ்வாதாரத்தை தியாகம் செய்து இயற்கை வளத்தைக் காக்கும் கம்பால் மீனவர்கள்!

வலை மூலம் செய்யப்படும் சிறிய வகை மீன்பிடித்தல் போதுமான வருவாயைத் தருவதில்லை.
Goa fishermen
Published on: 
Summary

கடந்த காலங்களில் கரைக்கு அருகிலேயே எளிதாக கிடைத்த கிளிஞ்சல்கள், மாண்டோவி நதியில் பாலங்கள் கட்டப்பட்ட பிறகு நதிப்படுக்கையில் களிமண் படிவுகள் மூடியதால் நதியின் ஆழத்திற்குச் சென்றுவிட்டன.

கோவா மாநிலம் பனாஜியில் உள்ள கம்பால் பகுதியில் வாழும் சிறு மீன்பிடிச் சமூகம், தங்கள் வாழ்வாதாரத்திற்காக மாண்டோவி நதியின் ஆழமான பகுதியில் உயிருக்கு ஆபத்தான முறையில் முழ்கி கிளிஞ்சல்கள் சேகரித்து வருகிறது. மீன்பிடிக்க முடியாத காலங்களில் பிற வேலைகளைச் செய்து வரும் இவர்கள், தற்போது இயற்கை வளங்கள் மீண்டும் பெருகுவதற்காகத் தங்களது வருமானத்தை இழந்து இரு மாத காலத்திற்கு கிளிஞ்சல் பிடிப்பதை தாமாகவே முன்வந்து நிறுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில் கரைக்கு அருகிலேயே எளிதாக கிடைத்த கிளிஞ்சல்கள், மாண்டோவி நதியில் பாலங்கள் கட்டப்பட்ட பிறகு நதிப்படுக்கையில் களிமண் படிவுகள் மூடியதால் நதியின் ஆழத்திற்குச் சென்றுவிட்டன. இதனால் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்கள் எவ்வித நவீன சுவாசக் கருவிகளும் இன்றி, நதியில் சுமார் ஆறு மீட்டர் ஆழத்திற்கு முழ்கி மூச்சை அடக்கிக் கொண்டு கிளிஞ்சல்களை அள்ளி வருகின்றனர். ஏழு முதல் எட்டு மீட்டர் நீளமுள்ள இரும்புக் குழாயை நதியில் ஊன்றி, கழுத்தில் 'கோப்லெம்' என்ற வலையைக் கட்டிக் கொண்டு, சிறிய இரும்புத் துண்டின் உதவியால் கிளிஞ்சல்களை சேகரிக்கும் இவர்களது பணி ஒவ்வொரு வினாடியும் அபாயம் நிறைந்ததாகும்.

தன்னிச்சையான முடிவு

இயற்கை மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பற்றி கோவா முதலமைச்சர் வலியுறுத்திய பேச்சுக்கு மதிப்பளித்து, கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இம்மீனவர்கள் கிளிஞ்சல் வேட்டையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். கம்பால் பகுதியைச் சேர்ந்த 25 படகுகளில் இயங்கும் மீனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளனர்.

இந்த இரண்டு மாத தற்காலிக தடையால் மீனவக் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. ஒரு சிலர் மாற்று வேலைகளுக்குச் சென்றாலும், பெரும்பாலானோர் போதிய வருமானமின்றித் தவித்து வருகின்றனர். வலை மூலம் செய்யப்படும் சிறிய வகை மீன்பிடித்தல் போதுமான வருவாயைத் தருவதில்லை.

இருப்பினும், சிறிய அளவிலான கிளிஞ்சல்களை பிடிக்காமல் வளர விடுவது எதிர்காலத்தில் பெரிய அளவிலான கிளிஞ்சல்கள் கிடைக்க வழிவகுக்கும் என்றும், அது மீனவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் இயற்கைச் சூழலுக்குப் பல நன்மைகளையும் தரும் என்றும் தேசிய அளவிலான மீனவர் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், மாண்டோவி நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதுடன், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com