மிசோரி காடுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான அரிய வகை வௌவால்கள்: மரங்களை அகற்றும் அமெரிக்க வனத்துறை!

காட்டின் இடைப் பகுதியில் உள்ள அடர்ந்த மரங்கள் அகற்றப்படுவதால், சூரிய ஒளி தடையின்றி வனத்தின் தரையை அடையும்.
bats in Missouri forests
Published on: 
Summary

முழு காடையும் அழிக்காமல், வௌவால்களின் பறக்கும் பாதையை மறைக்கும் குறிப்பிட்ட மரங்களை மட்டும் அகற்ற 'ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்' எனும் நவீன வனவியல் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் அமைந்துள்ள மார்க் ட்வைன் ஏரியைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் சுமார் 2,00,000 இந்தியானா ரக வௌவால்கள் தங்களின் கோடைக்கால வாழ்விடமாகக் கொண்டு வசித்து வருகின்றன. வட அமெரிக்காவில் வாழும் ஒட்டுமொத்த இந்தியானா வௌவால்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வௌவால்கள் இந்த ஒரே பகுதியில் திரள்வதால், இப்பகுதி வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளால் மிக முக்கிய இயற்கை சரணாலயமாகக் கருதப்படுகிறது. கோடைக்காலம் முடிந்ததும், இவை அனைத்தும் அருகே உள்ள சோடாலிஸ் இயற்கை பூங்காவில் உள்ள குகைகளில் குளிர்கால உறக்கத்திற்காக இடம்பெயர்கின்றன.

சீரமைக்கும் பணிகள்

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக முறையான வனப் பராமரிப்பு இல்லாததால், இக்காடுகளில் நிழலில் வளரும் சர்க்கரை மேப்பிள் மற்றும் அயர்ன்வுட் போன்ற அடர்ந்த மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் சூரிய ஒளி நிலத்தை அடைவதைத் தடுப்பதுடன், வௌவால்கள் இரவில் சுதந்திரமாகப் பறந்து உணவு தேடுவதற்கும் பெரும் இடையூறாக மாறியுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க ராணுவ பொறியாளர் படையும் தி கன்சர்வேஷன் ஃபண்ட் அமைப்பும் இணைந்து காடுகளைச் சீரமைக்கும் சிறப்பு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளன.

மரங்கள் அகற்றம்

முழு காடையும் அழிக்காமல், வௌவால்களின் பறக்கும் பாதையை மறைக்கும் குறிப்பிட்ட மரங்களை மட்டும் அகற்ற 'ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்' எனும் நவீன வனவியல் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட மரத்தின் தண்டுகளில் சிறிய வெட்டுகளை ஏற்படுத்தி, அதற்குள் நேரடியாக தாவரக்கொல்லி மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இலையுதிர்காலத்தில் மரங்கள் தங்களின் ஊட்டச்சத்துக்களை வேர்களுக்கு அனுப்பும்போது இம்முறை பயன்படுத்தப்படுவதால், மருந்துகள் விரைவாக செயல்பட்டு மரங்களை உலர வைக்கின்றன.

இ முறையில் உலர்ந்து போகும் மரங்கள் உடனடியாக வெட்டி அகற்றப்படாமல் அப்படியே விட்டுவிடப்படுகின்றன. இந்தியானா வௌவால்கள் பொதுவாக முதிர்ந்த மரங்களின் தளர்வான பட்டைகள், பிளவுகள் மற்றும் இடுக்குகளில்தான் தங்கி குட்டிகளை வளர்க்கின்றன. இதனால், இவ்வாறு உலர்ந்த நிலையில் நிற்கும் மரங்கள் அடுத்த 4 முதல் 10 ஆண்டுகளுக்கு வௌவால்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்களாக பயன்படும்.

வன விலங்குகளுக்கும் புதிய விடியல்

காட்டின் இடைப் பகுதியில் உள்ள அடர்ந்த மரங்கள் அகற்றப்படுவதால், சூரிய ஒளி தடையின்றி வனத்தின் தரையை அடையும். இது புதிய புற்கள், பூக்கும் தாவரங்கள் மற்றும் இளம் ஓக் மரங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதனால் வௌவால்கள் மட்டுமின்றி மான், காட்டு வான்கோழி போன்ற பல வனவிலங்குகளுக்கும் தரமான உணவு மற்றும் வாழ்விடம் கிடைக்கும். முதற்கட்டமாக 30 ஏக்கரில் முடிவடைந்த இத்திட்டம், தற்போது மார்க் ட்வைன் ஏரியைச் சுற்றியுள்ள 250 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com