

உலக அமைதிக்கு கலாச்சார பிணைப்புகளே மிக வலுவான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் நாகரிக ரீதியிலான ஒத்துழைப்பு, இந்த பிணைப்புகளை மேலும் பலப்படுத்தும் என்று அவர் கூறினார்.
இங்கு நடைபெற்ற முதல் 'எஸ்சிஓ நாகரிக உரையாடல் அரங்கை' தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, பேரரசுகள் உலகின் வரைபடத்தை மாற்றியிருக்கலாம், ஆனால் நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல்கள் உலகின் சிந்தனை முறையையே மாற்றியுள்ளன என்று குறிப்பிட்டார்.
எனவே, இந்த எஸ்சிஓ நாகரிக உச்சிமாநாடு என்பது வெறும் சடங்கு சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல, உலகிற்கு ஒரு புதிய திசையை காட்டும் தளமாக மாறக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் உள்ளிட்ட பல்வேறு எஸ்.சி.ஓ. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "உலகெங்கும் போர் மற்றும் அமைதியின்மை குறித்த விவாதங்கள் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், இந்தியாவில் நாங்கள் நாகரிக உரையாடல் மற்றும் இணைப்பு குறித்த முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளோம்.
கலாச்சார பிணைப்புகளே உலக அமைதிக்கான மிக வலுவான உத்தரவாதம் என்பதால், இந்த முயற்சி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா, சீனா, மத்திய ஆசியா மற்றும் யூரேசியாவின் பல பகுதிகள் இத்தகைய பண்டைய வணிக பாதைகள் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. வணிகர்களுடன் அறிஞர்களும் பௌத்த துறவிகளும் இந்த பாதைகளில் பயணம் செய்தனர். இத்தகைய பயணங்கள் கருத்துகள், மொழிகள் மற்றும் மரபுகளின் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தன.
உறுப்பு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் நாகரிக ரீதியிலான ஒத்துழைப்பு, இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இந்த மன்றம் புதிய கருத்துகளை ஊக்குவிப்பதோடு, கலாச்சார ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது பொதுவான நாகரிக அனுபவங்கள், உலகை ஒன்றிணைப்பதிலும் முக்கிய பங்காற்ற முடியும்," என்று அவர் கூறினார்.