

உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை முன்நிறுத்தி தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேவேளையில் அகிலேஷ் யாதவ் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜவை வீழ்த்த காங்கிரஸ் திட்டம் தீட்டி வருகிறது.
ஆனால் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் அடுத்த முதல்வராக யோகி ஆதித்யநாத் அல்லது மற்ற யாராவது ஒருவர் இருக்கலாம் என துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்திதான் பாஜக தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், துணை முதல்வரின் இந்த பேச்சு கேள்வியை எழுப்பியுள்ளது.
தற்போது முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்துவதில் தயக்கம் உள்ளதா? என கேசவ் பிரசாத் மவுரியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
யோகி ஆதித்யநாத் தற்போது எங்களுடைய முதலமைச்சர். தாமரை மலரும்போது, பாஜக முதலமைச்சர் மீண்டும் உருவாவார். பாஜகவை பொறுத்தவரையில், தேர்தலுக்குப் பின்புதான் முடிவு செய்யப்படுவார்.
எந்தவொரு மாநிலத்திலும் முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் பாஜக முன் நிறுத்தாது. தாமரை சின்னம்தான் முன் நிறுத்தப்படும். அதேபோல் பிரதமர் தலைமைத்துவம் மற்றும் அரசின் செயல்பாடு முன்நிறுத்தப்படும். தேர்தலுக்குப் பிறகு, தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்சி தலைமைத்துவம் மற்றும் பாராளுமன்ற போர்டு உடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கில் 2023-ல் இதுபோன்றுதான் நடைபெற்றது. வேட்பாளரை முன் நிறுத்தாது. மெஜாரிட்டி கிடைத்த பின்னர், முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார்.
உத்தர பிரதேசத்தில் மவுரியா ஓபிசி தலைவராக திகழ்ந்து வருகறிார். இவர் குஷ்வகா-மவுரியா சமூகத்தைச் சேர்ந்தவர். 2017-ல் இருந்து துணை முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.