நீட் தேர்வு தொடர்பான அமளியில் மயங்கி விழுந்த காங்கிரஸ் எம்.பி: டெல்லியில் பரபரப்பு

மாநிலங்களவையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து அமளி எழுந்தது. அப்போது காங்கிரஸ் எம்.பி. திடீரென மயக்கம் அடைந்தார்.
நீட் தேர்வு தொடர்பான அமளியில் மயங்கி விழுந்த காங்கிரஸ் எம்.பி: டெல்லியில் பரபரப்பு
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது. சுமார் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். கடந்த 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.

மேலும் நீட் தேர்வில் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்பனையாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. 6 வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது.

இதற்கிடையே, நீட் தேர்வு விவகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கச் செய்துள்ளன. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டன.

விவாதத்தை ஒத்திவைத்து விட்டு நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவாதத்தை தொடங்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள். விவாதம் தொடங்குவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி கொடுக்கவில்லை என்பதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட னர். இதேபோல், மாநிலங்களவையிலும் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது.

இந்நிலையில், மாநிலங்களவை தொடங்கியதும் நீட் பற்றி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தினார். இதையடுத்து மாநிலங்களவையில் அமளி எழுந்தது. அப்போது காங்கிரஸ் எம்பியான பூலோ தேவி நீதம் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் அவர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com