காவிரி நீர் விவகாரம் : தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி நீர் விவகாரத்தில் எத்தனை மனுக்கள் தான் தாக்கல் செய்தீர்கள்? எத்தனை மனுக்கள் வந்தாலும் தற்போது அதனை தள்ளுபடி செய்ய போகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on: 
Summary

காவிரி நதிநீர் திறப்பு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மூன்று இடைக்கால மனுக்களில் இரண்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், மூன்றாவது மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் 12-ஆம் தேதி வரை கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 11 டி.எம்.சி பற்றாக்குறை இருப்பதாகவும், அந்த நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

இடைக்கால மனு

அதுபோல, நீர் பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டாவது இடைக்கால மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடக இந்த ஆண்டு முழுமையாக திறந்து விடவில்லை. இதனால் 4 லட்சம் ஹெக்டர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை கர்நாடக முறையாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும், வறட்சிகால அடிப்படையில் நீரை பகிர்ந்து வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும், நிலுவையில் உள்ள 11 டிஎம்சி தண்ணீரை வழங்க உத்தரவிட வேண்டும் என்ற வாதங்களை தமிழ்நாடு முன் வைத்தது.

இந்த மனுக்களின் விசாரணை முடிவடைந்து இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, தமிழக அரசின் கோரிக்கைகளை நிராகரித்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

எத்தனை மனுக்கள்?

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் உமாபதி,காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழக அரசு புதிதாக ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், குறிப்பாக, அக்டோபர் 23-ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் விகிதம் 15 நாட்களுக்கு திறக்க உத்தரவிட்டும் கர்நாடகா அதனைச் செயல்படுத்தவில்லை என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், காவிரி நீர் விவகாரத்தில் எத்தனை மனுக்கள் தான் தாக்கல் செய்தீர்கள்? எத்தனை மனுக்கள் வந்தாலும் தற்போது அதனை தள்ளுபடி செய்ய போகிறோம் என தெரிவித்தனர்.

அதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உமாபதி, புதிய மனுவின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். அதில் வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளை பார்த்து அதன் பின்பு முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய இடைக்கால மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

X