

திருடர்கள் பயத்தால் பணத்தை வீட்டில் வைக்க முடியாமல் வயலில் புதைத்து வைத்த விவசாயி ஒருவருக்குப் பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.
ராஜஸ்தானை சேர்ந்த ஒரு விவசாயி, ஒரு வருடத்திற்கு முன்பு தனது நிலத்தை விற்றதன் மூலம் ரூ. 5 லட்சம் கிடைத்தது.
அந்தப் பணத்தைக் கொண்டு வீடு கட்ட நினைத்த அவர், வீட்டில் வைத்தால் திருடு போய்விடும் என்ற பயத்திலும், வீண் செலவு ஆகக் கூடாது என்பதற்காகவும் அப்பணத்தை அப்போதே ஒரு பாலிதீன் பையில் சுற்றி வயலில் குழிதோண்டிப் புதைத்து வைத்தார்.
ஒரு வருடத்திற்கு பின் பணத்தை மீண்டும் எடுக்க நினைத்த அவர், மதுப் பழக்கம் மற்றும் ஞாபக மறதி காரணமாக எந்த இடத்தில் பணத்தை புதைத்து வைத்தோம் என்பதை அந்த விவசாயி மறந்துவிட்டார்.
வயலில் பலமுறை தேடியும் பணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியில் தனது மனைவி மற்றும் மகனிடம் விஷயத்தைக் கூறவே, அவர்களும் வயலின் பல இடங்களில் தோண்டித் தேடிப் பார்த்தனர். இருப்பினும் பணம் கிடைக்கவில்லை.
சமீபத்தில் மழைக்கால சாகுபடி பணிகளுக்காக வயலைத் தயார் செய்து, வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விவசாயியின் மனைவிக்கும் மகனுக்கும் அந்தப் பாலிதீன் பை கிடைத்தது.
பையைத் திறந்து பார்த்த போது, உள்ளிருந்த ரூபாய் நோட்டுகள் முழுவதையும் கரையான்கள் அரித்துச் சின்னா பின்னமாக்கியிருந்தன.
சேதமடைந்த நோட்டுகளையாவது மாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், உள்ளூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்றுள்ளார்.
ஆனால், நோட்டுகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், அவற்றைப் பெற்றுக் கொள்ள வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை வங்கி கிளையை அணுகியும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.