

பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் நாட்டுக்கான நிபந்தனையற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி தெரிவித்தார்.
பிரதமரின் 25 ஆண்டுகால பொது சேவையை முன்னிட்டு, 'மன் கி பாத்' கருப்பொருளில் அமைக்கப்பட்ட 76 ஓவியங்களை கொண்ட கண்காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வைத்து விக்ரம்ஜித் சிங் இவ்வாறு குறிப்பிட்டார்.
"பாரத நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் நிபந்தனையற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக, நரேந்திர மோடி நாட்டின் மிக உயரிய குடிமக்கள் விருதான 'பாரத ரத்னா' விறுது பெற தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்" என்று சாஹ்னி கூறினார்.
சாஹ்னி, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மேலும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுடன் இணைந்து, கடந்த ஏப்ரல் மாதம் பா.ஜ.க.வில் இணைந்தார்.
'வேர்ல்ட் பஞ்சாபி ஆர்கனைசேஷன்' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சியில், மன்ஜித் சிங் வரைந்த 76 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவை பிரதமரின் 25 ஆண்டுகால பொதுச் சேவையை வெளிப்படுத்துகின்றன என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, "டெல்லியில் 'வேர்ல்ட் பஞ்சாபி ஆர்கனைசேஷன்' ஏற்பாடு செய்திருந்த, 'மன் கி பாத்' தொடர்பான ஓவிய கண்காட்சியில் இன்று கலந்துகொண்டேன்.
இதன் மூலம், நாட்டின் பல்வேறு மூலைகளில், வெளிச்சத்திற்கு வராமல் பணியாற்றும் எண்ணற்ற அறியப்படாத நாயகர்களை மோடி அடையாளம் காட்டியுள்ளார். மேலும், 'பெண் குழந்தையை காப்போம் - பெண் குழந்தைக்கு கல்வி புகட்டுவோம்', கதர் பயன்பாடு, தூய்மைப் பணி மற்றும் நீர் பாதுகாப்பு போன்ற பல விஷயங்களை மக்கள் இயக்கங்களாக அவர் மாற்றியுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், ஓவியர் மன்ஜித் சிங்கை உள்துறை அமைச்சர் அமித் ஷா கௌரவித்தார். அமித் ஷா மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து, பிரதமரின் பொது சேவை குறித்த குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களை வரவேற்ற சாஹ்னி, இந்த கண்காட்சியானது பொதுச் சேவையிலும், இந்திய மக்கள் மீதும் பிரதமர் மோடி கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்குச் சமர்ப்பிக்கப்படும் ஒரு மரியாதை என்று குறிப்பிட்டார்.