இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடா? காங்கிரஸ் மாநாட்டில் வெளிநாட்டுத் தலைவர் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு!

தெலங்கானா அரசாங்கமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இந்த உச்சி மாநாட்டை நடத்தியுள்ளன.
Rahul Gandhi
Published on: 
Summary

இந்த நிகழ்வுக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் விமர்சிப்பதையும், அதை காங்கிரஸ் கட்சி அனுமதித்திருப்பதையும் இரு கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் பாரத் உச்சி மாநாட்டில் வெளிநாட்டு அரசியல்வாதி ஒருவர் இந்திய தேர்தல் முறை மற்றும் ஜனநாயகத்தை விமர்சித்து முழக்கமிட்டது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஐரோப்பிய சோசலிஸ்ட் கட்சிகளின் பொதுச்செயலாளரான இத்தாலிய அரசியல்வாதி ஜியாகோமோ பிலிபெக் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "ஒரே நபர், ஒரே வாக்கு" என்ற கோட்பாட்டைப் பற்றிப் பேசியதோடு, "Vote Chor, Gaddi Chhod" (வாக்குத் திருடனே, பதவியை விட்டு விலகு) என்று முழக்கமிட்டார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேடையில் முன்னிலையில் இருந்தபோது இந்தச் சம்பவம் அரங்கேறியது.

பாஜக கண்டணம்

இந்த நிகழ்வுக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் விமர்சிப்பதையும், அதை காங்கிரஸ் கட்சி அனுமதித்திருப்பதையும் இரு கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். நாட்டின் ஜனநாயகத்தை வெளிநாட்டவர் கேலி செய்வதை அனுமதிப்பது தேசத்துரோகத்திற்கு நிகரானது என்று பாஜகவின் தெலங்கானா மாநிலத் தலைவர் ராமச்சந்தர் ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ராகுல் காந்தி ஒரு இந்தியத் தலைவரைப் போல் நடந்து கொள்ளவில்லை என்றும், வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோல், பிஆர்எஸ் கட்சியின் தேசிய ஊடகப் பேச்சாளர் கார்த்திக் இந்திரா ரெட்டி பத்தொல்லாவும் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் வெளிநாட்டு வெள்ளை இன அரசியல்வாதி ஒருவர் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரம் குறித்துப் பேசிவிட்டுச் செல்வதையும், ராகுல் காந்தி அதைக் கண்டு ரசிப்பதையும் சுட்டிக்காட்டி அவர் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

மறுபுறம், தெலங்கானா அரசாங்கமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இந்த உச்சி மாநாட்டை நடத்தியுள்ளன என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சி நிகழ்ச்சிக்காக அரசு நிதியை எவ்வாறு செலவிட முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், வெளிநாட்டுத் தலைவரின் இந்த கருத்து இந்திய அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X