

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அக்டோபர் 5-ஆம் தேதி மிசோரம் மாநிலத்திற்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் அமித் ஷா, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரது பயணத்திற்கான முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறாத போதிலும், வருகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினர்.
இந்த பயணத்தின்போது, மாநில கூட்டுறவு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை உள்துறை அமைச்சர் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அமித் ஷாவின் பயணத்தின்போது போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், ஐஸ்வாலின் ஃபால்க்லேண்ட் பகுதியில் உள்ள 'யூத் ரிக்ரியேஷன் சென்டர்' மற்றும் லெங்புய் ஆகிய இடங்களுக்கு இடையிலான பாதையில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதித்து ஐஸ்வால் துணை ஆணையர் லால்ஹ்ரியட்புயா உத்தரவிட்டுள்ளார்.
இந்த பாதையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்; மேலும், இப்பாதையில் அமைந்துள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களும் அக்டோபர் 5-ஆம் தேதி அன்று மூடப்பட்டிருக்கும்.