

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக, டெல்லி காவல்துறை தலைமையகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வு கூட்டத்தை நேற்று (வியாழன் கிழமை) நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு, திட்டமிட்ட குற்றங்கள், ஆயுத கடத்தல் மற்றும் தலைநகரின் ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டம், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெய் சிங் சாலையில் உள்ள காவல் தலைமையகத்திற்கு பிற்பகல் 3.15 மணியளவில் வருகை தந்த அமித் ஷா, காவல் செயல்பாடுகள், உளவுத்துறை தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பாதுகாப்புத் தயார்நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
வட்டாரங்களின் தகவல்படி, பெண்கள் பாதுகாப்பு, திட்டமிட்ட குற்றங்கள், ஆயுத கடத்தல் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களுக்கு இந்த கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், அக்டோபர் 24 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் மீதான முன்னேற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இது தவிர, காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிற முக்கிய விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அண்டை பகுதிகளில் சமீபகாலமாக நடந்துள்ள பாதுகாப்பு சம்பவங்களின் பின்னணியில், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், மிர் பஜார் அருகே உள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், மூன்று சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் காயமடைந்தனர்; அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், நவம்பர் 6 அன்று காசியாபாத்தில் உள்ள வசந்தாரா காவல் சோதனை சாவடியில் நிகழ்ந்த வெடிவிபத்து குறித்தும் குறிப்பிடப்பட்டது. இந்த சம்பவத்தில் உணவு விநியோக பணியாளர் ஒருவர் காயமடைந்ததுடன், காவல் நிலைய வளாகமும் சேதமடைந்தது. இது பயங்கரவாத செயலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உத்தர பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.