

பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. பெறப்பட்ட மொத்த புகார்களில் வங்கித் துறை தொடர்பாக 9,933 புகார்களும், ரெயில்வே துறை தொடர்பாக 9,381 புகார்களும் பதிவாகி முதலிடத்தில் உள்ளன. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6,531 புகார்களும், உள்ளாட்சி அமைப்புகள் மீது 4,834 புகார்களும், நிலக்கரித் துறை பணியாளர்கள் மீது 4,118 புகார்களும், நிதித் துறை மீது 3,107 புகார்களும் பதிவாகியுள்ளன.
டெல்லி நிர்வாகத்திற்கு எதிராக 2,804 புகார்களும, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு எதிராக 2,722 புகார்களும் வந்துள்ளன. டெல்லி காவல்துறையினருக்கு எதிராக 2,633 புகார்கள் பெறப்பட்ட வேளையில், மத்திய உள்துறை அமைச்சகம் (டெல்லி காவல்துறை நீங்கலாக) தொடர்பாக 2,036 புகார்கள் பதிவாகியுள்ளன.
கூடுதலாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீது 2,139 புகார்கள், மனிதவள மேம்பாட்டுத் துறை மீது 2,030 புகார்கள், தொழிலாளர் நல அமைச்சகம் மீது 1,894 புகார்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மீது 1,536 புகார்கள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மீது 1,469 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புத் துறை (1,410), நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை (1,123), எஃகு துறை (1,023) மற்றும் அஞ்சல் துறை (1,003) ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பதிவு செய்யப்பட்ட 70,584 புகார்களில், டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 64,905 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,679 புகார்கள் தற்போது விரிவான விசாரணையில் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, ஊழல் தொடர்பான புகார்கள் மீது மூன்று மாதங்களுக்குள் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.