உலகத்திலேயே மோசமான நடத்தை கொண்டவர் விராட் கோலி: பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா பாய்ச்சல்

உலகத்திலேயே மிகவும் மோசமான நடத்தை கொண்டவர் விராட் கோலி என பாலிவுட் நடிகர் நிசிருதீன் ஷா கடுமையாக சாடியுள்ளார். #ViratKohli
உலகத்திலேயே மோசமான நடத்தை கொண்டவர் விராட் கோலி: பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா பாய்ச்சல்
Published on

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்து உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். பேட்டிங்கில் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறாரோ அதுபோல சர்ச்சைகளிலும் சிக்கி கொள்வது வாடிக்கையான ஒன்றாகும். கோபம், ஆக்ரோ‌ஷம் அவருக்கு எதிரியாக இருக்கிறது.

சமீபத்தில் ஒரு ரசிகர் இந்திய வீரர்களின் பேட்டிங்கை விட வெளிநாட்டு வீரர்களின் பேட்டிங்கை ரசிப்பேன் என்று டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை விரும்பாதா, இதுபோன்ற ரசிகர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கோபமாக தெரிவித்தார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி கோலிக்கு எதிர்ப்பு உருவானது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியின்போது அவர் வார்த்தை மோதலில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் உலகின் மோசமான நடத்தை கொண்ட வீரர் விராட்  கோலி என்று பாலிவுட் நடிகரும், டைரக்டருமான நசிருதீன் ஷா சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல. அவர் உலகின் மோசமான நடத்தை கொண்ட வீரரும் ஆவார். விராட் கோலியின் திறமையான கிரிக்கெட் என்பது அவரது அகந்தை மற்றும் கெட்ட நடத்தையால் மங்குகின்றது. அத்துடன் எனக்கு நாட்டை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நசிருதீன் ஷாவின் இந்த கருத்துக்கு விராட் கோலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பலர் ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com