காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கணவரிடம் ரூ.30 கேட்ட பெண்ணுக்கு முத்தலாக்

உபியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கணவரிடம் ரூ.30 கேட்ட பெண்ணுக்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்த அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
முத்தலாக்
முத்தலாக்
Published on

லக்னோ:

முஸ்லிம் பெண்களை கணவர்கள் மூன்று முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கில் இருந்தது.

இதை தடுக்க முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் 2019 அமலுக்கு வந்துள்ளது. இதன்படி முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க முடியும்.

உத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தனது கணவரிடம் மருந்து வாங்குவதற்காக ரூ.30 கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த பெண்ணை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். அதில் எனக்கும், என் கணவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. சமீபத்தில் மருந்து வாங்க கணவரிடம் ரூ.30 கேட்டேன். அதற்கு அவர் என்னை கடுமையாக திட்டி சத்தம் போட்டார். பின்னர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து கணவரின் குடும்பத்தினரும் என்னை வீட்டில் இருந்து விரட்டிவிட்டனர். இப்போது ஆதரவு இல்லாமல் உள்ளேன் என கூறி இருந்தார்.

புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஹாப்பூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ்சிங் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com